கவிதை : மஹிந்தீஷ்
ஆனந்த சுதந்திரம்
எம் பாரதத் தாயின் சேலைத்
தலைப்பில் மூன்று நிறம்..
இன்று மொத்தமாய் அர்த்தப்பட்டது
வேறு விதம்..
'பச்சைத்' தமிழர்களை,
'சிவந்த' குருதிச் சேற்றில்
புதைத்த மேடுகளில்
'வெள்ளை' கொடி..
வேடிக்கை பார்க்கிறது
காற்றில் அசைந்தபடி
ஒரு'மூவர்ணக்' கொடி..
'பரவாயில்லை'.......
ஊழலுக்கு எதிராகப்
போர்க்கொடி பிடித்ததொரு
பழுத்த பழம்...
அதன் ஒவ்வொரு அசைவையும்
அறுத்து ருசித்தது ஜனநாயகம்..
'இருந்து விட்டு போகட்டும்'........
சோற்றுக்கு வழியின்றி
'குப்பனும் சுப்பனும்'..
சோகப்பட்ட சோமாலியாவாய்
பல கிராம வாழ்க்கைகள்..
ஊதிப் பெருத்த ஊழலின்
'லட்சம் கோடிக்கு' எத்தனை
பூஜ்யம் என்று விரல் விடும்
நகக் கண்களில் காய்ந்து
நாறியது 'எலிக் கறியின்'
மிச்சம்..
'மிக்க மகிழ்ச்சி'.....
இனி குடும்பக் கட்டுப்பாடிற்கு
அவசியமில்லை..
இந்திய சாலைகளில்
சேகரிக்கப்படும் மழை நீர்
மக்கள் தொகை குறைக்கும்
எளிய வழிமுறை..
(அதனால் என்ன..?
ஆகாயத்தில் அலையும்
செயற்கை கோள் செய்கிறோமே..!!)
அன்றைய ஜனாதிபதியின்
கூற்றுப்படி கனவு காண்போம்..
வல்லரசாக அல்ல..
வடிகால்கள் சீராய் அமைய...
'அல்லேலூயா' போர்வையில்
அயல் நாட்டு வருமானம்..
அல்லாவின் பெயரைச் சொல்லி
ஆண்டுக்கு மும்முறையேனும்
சதைத் துணுக்குகளாய்
சிதறடிக்கப்படும் 'மனிதம்'...
மஞ்சத்தில் 'பஞ்சம்' பிழைத்து
'பிரம்மச்சர்ய' போதனை..
'போனால் போகட்டும்'.......
அரசு பொறுப்பில் மதுபானம்..
அரசியல்வாதிகளுக்கு
'பொறியியல் கல்லூரிகள்'..
ஆட்சிக் கட்டிலேறி சுகமான உறக்கம்..
தற்புகழ்ச்சிப் பாடல்களுக்கு
கவிஞர் கூட்டம்..
ஓட்டுக்குப் பணம்..
வீட்டுக்கு பசுமாடு...
எல்லாம் கிடக்கட்டும்..
இன்று கொடியேற்றி பல
இடங்களில் கொடுப்பார்கள்
'கொய்யா' மிட்டாயும்
'ஆரஞ்சு' மிட்டாயும்..
அடைந்து விட்ட
'ஆனந்த சுதந்திரத்தின்'
அடையாளமாய்
இருந்து விட்டு போகட்டும்
குப்பையோடு குப்பையாய்
உரித்து போட்ட சாக்லேட்
உறைகளாவது ...
வாழ்க பாரதம்.
ஜெய் ஹிந்த்...
No comments:
Post a Comment