Sunday, March 04, 2012

கவிதை நேரம்


              வாடகை வாசம்



















கஞ்சிக்குச் செத்து
காசுக்கு வந்தவள் 
என்றாலும்  
கரிசனங்கள் கல்லாய் கனத்தன..

முந்தானை எடுத்தென்
முகம் கவிழ்த்த
வேளையில்
என்றோ தொலைந்த,
நன்றாய்த் தொலைத்த
தாயின் வாசம்
நாசிகளில் உறைத்தது..

சட்டென மூளை வரை
சடசடவென
உருண்டோடிய உணர்வுகளில்,
விழி மூடிப் பார்த்த
பார்வைகளில்
பாசாங்கில்லை

பொய்யில்லை..

பகலும், இரவும்
புலன்கள் கொண்டுப்
பசிகளும், பரிதாபங்களும்
பரிமாறிப் பரிமாறி
குற்றங்கள் நேசமாயின
தனங்கள் தேசமாயின..

‘கண்மணி’க்குள்
‘கண்’மணிகள்
கடந்த காலங்களையும்
காதல் கசடுகளையும்
காற்று வெளியிடைக்
கற்றுத் திரிந்தவைகளையும்
அடித்துத் திருத்தி
கற்பித்து ஓய்ந்தன
இல்லாத இடைவெளிகளில்..

மிச்ச மீதிகளைச்
சலித்துத் தேடித்
தேடிச் சலித்து
முத்தங்கள் தனித்து
இளைப்பாறிய வேளையில்
பெயர்கள் அழிந்து
பந்தங்களே மிஞ்சின..

உலகம் அலறிய
ஒழுக்க மீறல்
அன்பின் தூரலாய்
அடையாளப்பட்ட பின்
மீளா வலியோடேனும் 
அரைக்காசாவது மிச்சம்
வைக்கத் தூண்டியது
உள்ளே ஒரு
சுயநலப் பேய்
அவளின்
இரண்டாம் வருகைக்காய்..

வேண்டாமென்றோ,
‘வேண்டும்’ என்றோ...
அன்று எதற்கோ
நெகிழ்ந்து அழுதவாறு
நெற்றியில் இதழ்த்தடம்
நூற்றாண்டுகள் வாழ
முத்தமிட்டு
நெடு நேரம்
விடை பெற்றவளை
சத்தியமாக
அழைக்க முடியாது
நீங்கள் சூட்டிய
பெயர் கொண்டு...

                                                                                                                        -மஹிந்தீஷ் 



                                                                                          

No comments: