Tuesday, February 28, 2012

உலகத்திரை அலசல் 1: ரஷியத் திரைப்படம்


என் காதுகளில்... "THE CUCKOO"

2002-இல் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் என்று உலகம்
முழுவதும் நடந்த திரைவிழாக்களில் பெருமைக்குரிய பல விருதுகளைக்
குவித்த ரஷ்ய மொழிப் படமான Alexander V.Rogozhkinனின் THE CUCKOO வை சமீபத்தில் பார்க்க நேரிட்டது..

இரண்டாம் உலகப்போரின் நீட்சியாக பகைமை பாராட்டிய பாசிஸ ஜெர்மனியின் சிறு அங்கமான FINNLAND மற்றும் சோவியத் நாடுகள், போரின் முடிவில் இருந்த சூழலை அடிப்படையாக கொண்ட கதையே THE CUCKOO.

ஒரு FINNISH வீரனும், ரெட் ஆர்மியின் (சோவியத்திற்கு எதிரான குற்றங்களுக்காக தேடப்படும்) படைத் தலைவனும், ஒரு SAAMI இனப் பெண்ணிடம், (அவளால் உயிர் காக்கப்பட்டு, வசதி ஏதுமற்ற அவள் பண்ணை வீட்டிலேயே) போர்ச்சூழலில் சிறிது காலம் அடைக்கலம் பெறுகிறார்கள்..
இவர்கள் மூவருக்கிடையே மொழி வேறுபாட்டால் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் அழகிய முரண்களின் தொகுப்பே THE CUCKOO’.
மர உச்சியில் வீடமைத்து தங்கள் இலக்குகளுக்காக தனிமையில் காத்துக் கிடக்கும் FINNISH ஸ்னைப்பர்களுக்கு- (தொலைதூர இலக்கை வீழ்த்தும் துப்பாக்கியை கையாளும் வீரர்) சோவியத் வீரர்கள் வைத்திட்ட பட்டப் பெயரே KUKUSHKA அதாவது CUCKOO’.

படம் தொடங்கும் போது, சோவியத் வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்ட ஒரு FINNISH ஸ்னைப்பர், குன்றில் பாறையோடு சங்கிலியால் பிணைக்கப்பட்டு தனிமையில் விடப்படுகிறான்.

பல மணி நேர போராட்டத்திற்குப் பின் சாதுர்யமாக அதிலிருந்து விடுபடும் அவ்வீரன் அருகில் வாழும் ஒரு SAAMI இனப் பெண்ணிடம் தஞ்சம் புகுகிறான்.. 
ஏற்கனவே அங்கு போரில் ஒரு தவறுதலான சோவியத் தாக்குதலால் படு காயமடைந்த ரெட் ஆர்மியின் படைத் தலைவன் அவளால்
காப்பாற்றப்பட்டு ஒய்வெடுத்த நிலையில் இருக்கிறான்..
FINN வீரனை பாஸிசவாதியாகக் கருதி அவனை எப்பொழுதுமே எதிரியாகப் பார்க்கும் ரெட் ஆர்மி கேப்டனுக்கு, தான் போர்களில் விருப்பமில்லாதவன் என்றும், யாருக்கும் எந்த தீங்கும் செய்யப்போவதில்லை என்றும், தான் ஒரு கவிஞனாகவே சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட விருப்பமுள்ளவன் என்பதையும்  புரிய வைக்கும் முயற்சியில் படம் முழுதும் ஈடுபடுகிறான் FINN வீரன்..

ரெட் ஆர்மியின் தலைவனோ அவன் சொல்வதை புரிய விருப்பமற்றவனாய் வலம் வருகிறான்.. 
சமயம் கிடைக்கும் போது அவனைக் கொன்று விடவும் முயற்சிக்கிறான்.. 
தன் மேல் காதல் வயப்பட்டிருந்த அந்த SAAMI இனப் பெண் இப்போது FINN வீரனைச் சுற்றிச் சுற்றி வந்து சேவை செய்வதும் அவனைக் காதலிப்பதும், தன்னைத் தருவதும் சோவியத் வீரனை  மேலும் மேலும் காழ்ப்புணர்ச்சிக்கு ஆளாக்குகிறது..
ஒரு சமயம் பிழையான புரிதலில் FINN வீரனை சுட்டே விடுகிறான் - சுட்ட பின்னர் போர் நிறைவடைந்து விட்ட செய்தியை ஒரு விபத்திற்குள்ளான விமானத்தில் இருந்து சிதறிக் கிடக்கும் துண்டு பிரசுரங்களின் வாயிலாகக் கண்டறிந்து குண்டடிப்பட்டவனை தூக்கிக் கொண்டு SAAMI பெண்ணிடம் ஓடுகிறான் 'ஆன்னி' என்கிற அவள்  சில மெஸ்மரிச, மற்றும் மாந்தரீக முறைகளைக் கையாண்டு இறந்து கொண்டிருக்கும் FINN வீரனை  மீட்கிறாள்.. 

அதன் பின் உங்கள் தந்தைகள் இருவரும் நண்பர்களாக தத்தம் நாட்டுக்கு சென்று விட்டார்கள் என்று தன் இரு குழந்தைகளிடம் அப்பெண் கூறிக் கொண்டிருப்பதாக திடுமென படம் பல கலவையான உணர்ச்சிகளைப் பார்வையாளனுக்குப் பரிசளித்து நிறைகிறது..

படமெங்கும் அள்ளித் தெளித்த பச்சை மலைகள், வண்ணக் காடுகள், திடீர் திடீரென்று வெகு அருகே பறந்து செல்லும் போர் விமனாங்கள் என்பதான சூழல் மூலம் மனதை லேசான பயம் கவ்விய ஏகாந்த உணர்விற்கு தொடக்கத்திலேயே வெகு சாமர்த்தியமாக நம்மை தயார் செய்து விடுகிறார்கள் இயக்குனர் அலெக்ஸான்டரும், ஒளிப்பதிவாளர் ஆன்ட்ரே ஷெகலாவ்வும்.. இதற்காகவே இருவருக்கும் முதலில் ஒரு சபாஷ்.

மூவரும் ஆளாளுக்கு ஒரு மொழியில் எதையோ பேசி எதையோ புரிந்து கொண்டு போகும் காட்சிகள் உலகத்தர நகைச்சுவைக்கு சிறந்த உதாரணங்கள் - (REDIRECT TO OUR DIRECTORS)

அன்பிற்கு மொழி உட்பட எதுவும் தடையில்லை, தாழில்லை என்று மயக்க ஊசி போட்டு நடு நெற்றியில் ஆணி அறைந்து சொல்லியிருக்கிறார்கள்..
*இரு வீரர்களிடமும் (கொஞ்சம் அதிகமாக FINNISH வீரனிடம்) காதல் வயப்படும் போரில் விதவையான ஆன்னி நான்கு வருடங்களாக ஆண் துணையின்றி இருந்ததால் இப்போது தூய ஆவிகள் தனக்கு ஒரே சமயத்தில் இரண்டு ஆண்களைக் கொண்டு வந்து சேர்த்திருப்பதாக போகிற போக்கில் சொல்லி விட்டு போகிற காட்சி, எல்லா தேசங்களிலும் வெவ்வேறு சூழல்களில், அவரவர் கலாச்சார பிம்பங்களினூடே சிக்கித் தவிக்கும் விதவைகளின் சொல்லொண்ணாக் கண்ணீர்க் குறியீடாக நெஞ்சில் கனக்கிறது..
இறுதியில் ஆன்னி (SAAMI பெண்) தன் உண்மையான பெயர் குக்கூ என்று சொல்வதையும் ஒரு ஒற்றுமையாக்கி அழகிய காட்சிப் படிமத்தை ஒளிர வைத்திருக்கிறார் இயக்குனர் அருமை.
*அழகான திரைக்கதை, அளவான பாத்திரங்கள், போர்க்காலத்தின் பதிவோடு கூடிய கதை, இறுதிக் காட்சி வரை கண்களை அடை காக்கும் திரைக்கதைக்கேற்ற இதமான ஒளிப்பதிவு, காலச்சூழலை உள் வாங்கி எப்படி எப்படியெல்லாமோ எதிரொலிக்கும் மனித மனங்கள் என்று பிரமிக்க வைத்திருக்கிறார்கள்.. 

SAAMI இனப்பெண்ணாக Anni-Kristiina Juuso’வும், FINNISH வீரனாக ‘Ville Haapasalo’ வும், சோவியத் வீரனாக ‘Viktor Bychkov’ வும் வாழ்ந்திருக்கிறார்கள் 

படத்தினைக் குறித்தவொரு பெரிய ஆச்சர்யம், இதனை நகைச்சுவைப் படமாக அடையாளப்படுத்தியதே!! ஒருவேளை இவ்வளவும் போர்க்காலத்தில் நகைச்சுவை தானோ என்னவோ..?!

மேலும் மனதை நெருடும் மூன்று விஷயங்கள்.. 
1)  நான் போரை விரும்பவில்லை என்ற ஒற்றை வரியை சைகையால கூட தெரிவிக்க இயலாமல் FIN வீரன் தவிப்பதும், அது புரியாமலேயே மற்றொரு வீரன் கடைசி வரை உலா வருவதும் கொஞ்சம் மிகை
2)    படம் முழுக்க வசனங்களுக்கு குறுக்கே அசரீரியாக ஒலிக்கும் ருஷிய மொழியாக்க வேலை - பெரும் இடைஞ்சல் - இந்த முறையை இனி யாரும் கையாள வேண்டாம் என்றே சொல்லத் தோன்றுகிறது
   3) வழக்கமான FESTIVAL BRANDED SLOW CUTS

இவற்றைத் தவிர்த்திட்டால் THE CUCKOO அவ்வருடத்தின் மிகச் சிறந்த குரலில் ஒலித்த கானக் குயிலே!
                                                                                                      -மஹிந்தீஷ் 
                                                        



No comments: