Wednesday, March 21, 2012

RELAX CORNER: STORY TIME



சற்றே பெரிய சிறுகதை:                                                           மஹிந்தீஷ்  



ஓர் (அதி)முக்கிய முன் குறிப்பு:
இக்கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் யாவும் நூறு சதவிகித கற்பனையே அன்றி யாரையும் (நான் உட்பட) குறிப்பிடுவன அல்ல..




கணேசன் பெயர் என்ன?

பாங்..பாங்.. மூன்று இஞ்ச் இடைவெளியில் முதுகுக்குப் பின்னால் பேய்த்தனமாக அலறிய பேருந்திற்காக துள்ளி குதித்து ஒரு ஜெட் லீ சாகசம் நிகழ்த்த வேண்டியிருந்தது.

கோவை பேருந்து நிலையமே கணேசனைப் பார்த்தது. நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் அவ்விடத்தின் மைய ஈர்ப்பு விசையாக மாறியிருந்தான் கணேசன். மூன்று இலவசபொது ஜன அறிவுரைகளுக்குத் தலையாட்டி வழிந்து விட்டு பத்தடி தூரத்தில் இருந்த டீக்கடைக்குப் போனான்.

தண்ணி குடிங்க சார் மொதல்ல என்றது டீக்கடை.
அடப்பாவி நீயுமா..?
கரிசனத்திற்காக இரண்டு வடையும், டீயுடன் சேர்த்து அரை பாக்கெட்  கோல்ட் கிங்க்ஸ்ஸும் சொல்ல வேண்டியிருந்தது.

புன்னகைத்த டீக்கடைக்கு முதுகு காட்டி நின்றபடி பேருந்து நிலையத்தைப் பார்த்தான்.
இன்னும் சில பேர் இவன் மேலிருந்த பார்வையை எடுக்காமல் பக்கத்தில் இருந்தவர்களிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

அங்கு பலருக்கு அவரவர் பஸ் வரும் வரை ஒரு கதை கிடைத்தாயிற்று..பஸ் நிற்காமல் மோதியிருந்தால் கதையில் சுவாரஸ்யம் கூடியிருக்கும்..
இன்னும் சில பேர் அப்படியும் புள்ளி வைத்து ரங்கோலிகள் வரைந்து கொண்டிருக்கலாம்..யார் கண்டது?

எரிச்சலாக இருந்தது கணேசனுக்கு. காலையிலிருந்தே எல்லாம் நொண்டியடித்தது.
ஒரு வாரத்திற்கு முன் போரடிக்குதுப்பா என்று கொஞ்ச நாளைக்கு புதுவையிலிருக்கும் பிறந்தகத்திற்கு பிள்ளைகளுடன் போய் விட்டாள் அன்புள்ள அர்ச்சனா. 

முதல் இரண்டு நாட்கள் ஜாலி ஜனகராஜாகக் கழிந்த பின் மூன்றாம் நாள் வீடு டாஸ்மாக் பக்கத்து குப்பக்குளம் போல் ஆகிவிட்டிருந்தது.

நண்பர்களின் புண்ணியத்தால் சமையலறை இரு பரமாத்மாக்கள் நடத்திய பாரத யுத்தம் கண்ட பூமியாகக் காட்சியளித்தது.

அட்டாச்டு பாத்ரூமும், டாய்லெட்டும் கட்டண கழிப்பறை அந்தஸ்து பெற்றிருந்தது.

கூத்தடிக்க வந்த தடியன்களை சுத்தம் பண்ண அழைத்த போது ஒபாமா அளவிற்காவது பிஸி என்றார்கள்.

நேற்று வராந்தா ஓரமாக ஒரு தவளையும் அதைப் பின் தொடர்ந்தொரு பசித்த பாம்பும் வந்து போயின..
எட்டாவது நாள் வீட்டிலிருக்கவே பயமாக இருந்தது கணேசனுக்கு.

இவ பாட்டுக்கு போய் உட்கார்ந்துட்டாளே என்று அத்தனை கோபமும் அர்ச்சனா மேல் திரும்பியது..

இரண்டு செட் சுருட்டி எடுத்துக் கொண்டு மனைவியை அழைத்து வர பாண்டிச்சேரி கிளம்பி விட்டான்.

எக்ஸ்க்யூஸ்மீ சார் திடீரென்று காதருகே யாரோ கணேசனைக் கலைத்தார்கள்.

டீ கப்போடு படக்கென திரும்பவும் தோளில் தொங்கிய பையில் லேசாகத் திறந்திருந்த ஸிப்பின் வழியாக கச்சிதமாக டீத்துளிகள் உள்ளே விழுந்து ஆசையாசாக அர்ச்சனா வாங்கித் தந்த சட்டையை ருசி பார்த்தது.

ஐயோ போச்சு..போச்சு..செத்தேன் என்று உள்ளே பதறியபடி இன்னும் எங்கெல்லாம் ஆயிற்றோ என்று சோதித்துக் கொண்டிருந்தான்.

சார்.. மீண்டும் அதே குரல்.
பல்லைக் கடித்தபடி நிமிர்ந்து என்ன்ன்ன சார்..? என்றான் கணேசன்

சார்.. நீங்க மிஸ்டர் மாணிக்கம்பிள்ளையோட ஸன் தானே..?
துல்லியமாக தந்தையின் பெயரை மாற்றிச் சொல்லி குடும்பத்தையே கேவலப்படுத்தினான் அந்த அந்நியன்.

இல்ல சார் வேதநாயகம்பிள்ளையோட பேரன் எரிச்சலோடு சொல்லி விட்டு அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டான் கணேசன்.

எந்த எதிர்வினையும் இல்லாமல் அவன் முகம் மாறியதை தன் முதுகுக்குப்பின் கணேசனால் உணர முடிந்தது.

சற்றைக்கெல்லாம்சே! ஏன் இப்படி நடந்து கொண்டோம்..! என்றாகி மன்னிப்பு கேட்கும் தோரணையில் திரும்பினான்.

இவனை முந்திக் கொண்டு அவன் ஐயம் எக்ஸ்ட்ரீம்லி சாரி சார்..ஏதோ சின்ன குழப்பம்..அதான்.. என்றான்.

இல்ல சார் நான் தான் அவசரப்பட்டு பேசிட்டேன்..ஐயம் சாரி
பரவாயில்ல சார்..கொஞ்ச நாளாவே இதெல்லாம் எனக்கு பழகிப் போச்சு என்றான் பேச்சை வளர்க்கும் விருப்பத்தில் எங்கோ வெறித்துக் கொண்டு..

பேருந்து வரும் வரை பேச்சுக்கொடுக்கலாமே என்று கணேசனும்
 “ஏன் சார் என்ன ஆச்சு? என்று தனக்கு சுத்தமாக சம்பந்தமில்லாத ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தான்.

சட்டென்று பதில் சொல்லாமல் உள்ளே வேக வேகமாய் மூச்சிரைத்துக் கொண்டிருந்தான் அவன்.

இப்போது தான் அவனை முழுமையாகப் பார்த்தான் கணேசன்.
ஆரோ சட்டை அணிந்து கருப்பு ஜீன்ஸில் டக் இன் செய்திருந்தான்.

கண்களுக்கு ரேபான் தர குளிர்க் கண்ணாடியும், கால்களுக்கு வான்ஸ் மென் கிளாசிக் கட் ஷூவும் கொடுத்திருந்தான்.

உயரத்திற்கேற்ற பருமனும், சிவந்த மேனியும், அலட்சியமாக சீவப்பட்ட க்ராப்பும், குழந்தை களை கட்டிய வட்ட முகமுமாய், சட்டென்று பெண் சிநேகிதங்கள் அமைந்து விடும் தோற்றத்தில் பளிச்சென்று இருந்தான்.

இருபத்தியேழு அல்லது இருபத்தியெட்டு சொல்லலாம்.

அவன் கண்களைப் பார்க்க முடியவில்லை..குளிர்க் கண்ணாடி பெரிதாக இருந்தது..
முகத்தின் மற்ற பகுதிகள் அசைந்த விதம் உள்ளே அவன் ஏதோ ஒரு கலக்கத்தில் இருப்பதைக் காட்டிக்கொடுத்தன..

சார்.. கொஞ்சம் உரக்கக் கூப்பிட்டான் கணேசன்.

ம்ம்.. என்றான் புதிதாக கேட்டது போல்.

இல்ல சார்..வந்ததுலேர்ந்து ஒரு மாதிரி இருக்கீங்களே வீட்டுல ஏதாவது பிரச்சனையானு கேட்டேன்

கேட்கும் போதே கணேசனுக்குள் உனக்கு எதுக்கு இந்த நாட்டாமை வேலை என்று மணி அடித்தது..

மெதுவாக கண்ணாடியை அகற்றி சட்டையில் மார்புப் பகுதியில் செருகிக் கொண்டு, கைகளைக் கோர்த்தபடி அருகிலிருந்த பெஞ்ச்சில் அமர்ந்தான். கணேசனும் பையை இறக்கி பக்கத்திலேயே வைத்துக் கொண்டு அமர்ந்தான்.

சிறிது நேரம் தரையை வெறித்து விட்டு கணேசனிடம் திரும்பி கையை நீட்டி ஐயம் வெங்கட் விக்னேஷ்வர் என்றான்.

வெங்கட்டு...? விக்னேஷ்வரா..? வேடிக்கையாக இருந்தது கணேசனுக்கு.

கணேசன் தன் பெயரைச் சொல்லி நீட்டிய கையைப் பற்றிக் குலுக்கினான். கூலிங்கிளாஸ் இல்லாமல் அவன் கண்களை முதன்முறையாகப் பார்த்தான். 

மிகவும் சோர்ந்து, சிவந்து, ஓய்வு தொலைத்த பாகமாய் அவன் முகப் பொலிவை கெடுத்துக்கொண்டிருந்தன அவை.

இந்நிலையில் இவன் குளிர் கண்ணாடி அணிந்திருப்பது சரியே என்று தோன்றியது கணேசனுக்கு.

லேசாக தொண்டையை செருமியபடி
கொஞ்ச நாளாகவே எனக்கு ஒரு விசித்திரமான பிரச்சனை சார் ... என்று பலத்த பீடிகையோடு ஆரம்பித்தான்.
கணேசனுக்கு அவன் பெயரே விசித்திரமாகத்தான் இருந்தது.

ஆவல் பொங்க அவன் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
எனக்கு சொந்த ஊர் கோயம்புத்தூர் தாங்க..சாய்பாபா காலனில வீடு
ஒரு மாசத்திற்கு முன்னால என் பிசினஸ் விஷயமா வேலூர் வரை
போக வேண்டியிருந்தது..

வேலை முடிந்து திரும்பி பஸ் ஸ்டாண்ட் வர்றப்போ ரெண்டு பேர் என்னைப் பார்த்துட்டு ஓடி வந்து கையைப் பிடிச்சு தரதரன்னு அங்க இருந்த டாய்லெட் ஓரமா இழுத்துட்டு போய் நெட்டித் தள்ளி
யாரோ ஒரு ஆள் பேர சொல்லி எங்க அவன்னு ரொம்ப முரட்டுத் தனமா விசாரிச்சாங்க..

யார் அவங்க..? என்ன பிரச்சனை..? எதுக்கு என்னை இழுத்துக்கிட்டு போய் யாரைப் பத்தியோ விசாரிக்கிறாங்கனு எனக்கு எதுவுமே புரியலை. அவங்க கிட்ட அதை சொன்னப்போ கூட என்னை நம்பாம என் மொபைலைப் பிடுங்கி அவசரமா எதையோ தேடி ஏமாந்து, அதாலேயே என்னை ஓங்கி அடிச்சிட்டு போயிட்டாங்க..

கொஞ்சம் இடைவெளி விட்டு அவனே தொடர்ந்தான்..
யாரோ திருட்டுப் பசங்களாயிருக்கும்னு பார்த்தா எங்கிட்ட இருக்குற
எதையும் அவுங்க எடுத்துக்கிட்டும் போகலை..
நான் ரொம்ப குழப்பத்தோட ஊர் வந்து சேர்ந்தேன்..

இது நடந்து ஒரு வாரம் இருக்கும்னு நினைக்கிறேன்..அடமானத்துல இருக்கிற எங்களோட பூர்வீக சொத்து ஒன்றை திருப்ப பொள்ளாச்சி போயிருந்தேன்..

ஒரு வயசான அம்மா திடீர்னு என்கிட்ட வந்து என் முகத்துல காறித் துப்பி கண்டபடி திட்ட ஆரம்பிச்சிருச்சு..கோபம் ஒரு பக்கம், அவமானம் ஒரு பக்கமுமா அந்த பொம்பளைய பார்த்து சத்தம் போடலாம் என்று போய் விட்டேன்..

அதுக்குள்ள அந்த அம்மா..நல்லா இருந்த என் பொண்ண நாசம் பண்ணி அவ வாழ்கையவே பாழாக்கிட்டியேடா பாதகத்தா.. முந்தா நேத்து அவ தற்கொலை பண்ணிக்க போயிட்டாடா சண்டாளப் பாவி..நீ உருப்புடமாட்டடா..அப்படி..இப்படின்னு னு ஒப்பாரி வெச்சு மண்ணைத் தூத்தி சாபம் விட ஆரம்பிச்சிருச்சு..

மெள்ள கூட்டம் கூடவும் நான் பயந்து போய் அந்த இடத்தை விட்டு ஓடி வந்துட்டேன்

சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவன் கண்கள் அவமானத்தால் லேசாக மின்னியது..கண்ணீரை மறைக்க நினைத்தோ என்னவோ சட்டென்று கூளிங் கிளாசை எடுத்து மாட்டிக்கொண்டான்..

ஒரு தடவை இல்ல..ரெண்டு தடவை இல்ல..போன மாசம் மட்டும் இதே மாதிரி நாலஞ்சு இடத்துல தேவையில்லாம அவமானப்பட்டுட்டேன் சார்..
என்று முடிக்க முடியாமல் சொற்கள் உடைந்து தடுமாறினான்..
கணேசனுக்கும் ஒன்றும் புரியவில்லை..இதற்கு என்ன சொல்வது என்றும் தெரியவில்லை..

“ஸ..ஸார் என்றான்.

அவன் சுதாரித்துக் கொண்டு ஐயம் ஸாரி..அதாவது...என் நிலைமை என் விரோதிக்கு கூட வரகூடாது சார்..

அப்புறம் தான் பட்டுன்னு ஒரு பொறி தட்டுச்சு.. அச்சு அசலா யாரோ என்னை மாதிரியே இருக்க வேண்டும்..அதனால் வருகிற குழப்பம் தான் இதெல்லாம் என்று நினைத்தேன்..

ஆனால் அப்படி ஒன்றை நம்புவதற்கு எனக்கே சிரமமா இருந்தது..
சினிமாவில் வருகிற மாதிரி ஒரு பிரச்சினையை யாரிடம் கொணடு போனாலும் அவர்கள் நம்ப வேண்டுமே என்கிற யோசனையில் ஒரு நான்கைந்து நாட்கள் வீட்டை விட்டுக் கூட வெளியே வராமல் இருந்தேன்.

அப்பவும் வீட்டில் இந்த பிரச்சனையைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை..நான் இப்படி இருப்பதைப் பார்த்து என் மனைவி ரொம்ப பயந்து போயிட்டா..பிசினஸும் இதனால ரொம்ப பாதிப்படைஞ்சது..

ஒரு வார தீவிர யோசனைக்கு பிறகு, முதலில் வீட்டில் மட்டும் விஷயத்தை பட்டும் படாமல் சொல்லி விட்டு, போலீஸ் ஸ்டேஷன் போய் விடலாம் என்று தீர்மானித்தேன்..

நடந்ததையெல்லாம் ஒரு புகாராய் எழுதி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் போனேன். ஆரம்பத்தில் கொஞ்சம் சந்தேகமாய் மேலும் கீழும் என்னை பார்த்த எஸ்.ஐ. கிட்டத்தட்ட ஒரு மணி நேர விசாரணைக்குப் பின் என் கைரேகை மற்றும் என் புகைப்படம், குடும்ப அட்டை, லைசன்ஸ், இவற்றுக்கான காபிகளை வாங்கிக் கொண்டு ஒரு கடிதத்தைக் கொடுத்தார்கள்"

உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கும் வரை அதனுடைய காப்பியை எங்கே போனாலும் கையோடு கொண்டு போகச் சொன்னார் அந்த எஸ்.ஐ..

நேத்து வரைக்கும் அப்படியே செஞ்சிக்கிட்டு வந்தேன்..எங்கேயாவது இப்படி எசகு பிசகா மாட்டிக்கும் போது அதைக் காட்டி விளக்கம் சொன்னால் தான் தப்பிக்க முடியும்ன்ற நிலைமை..மூணு நாளைக்கு முன்னால அதுக்கும் வந்தது ஒரு சோதனை..” என்று மூச்சு வாங்கி நிறுத்தினான்.

மறந்தாப்புல ஒரு தடவை என் மனைவி லெட்டர் வைத்திருந்த பேண்டை அப்படியே துவைக்க போட்டுட்டாளேனு மேலும் சில பிரதிகள் எடுக்குறதுக்காக ஒரிஜினலை எடுத்துக்கிட்டு கிளம்பினேன்..ஆனா போகிற வழியில் பர்சை யாரோ பிக் பாக்கெட் அடிச்சுட்டாங்க ஸார்..
வலியோடு மீண்டும் சற்று இடைவெளி கொடுத்தான்..

கணேசனுக்கு எல்லாமே ஏதோ த்ரில்லர் படம் பார்க்கும் அனுபவத்தை தந்து கொண்டிருந்தது..

இப்படியெல்லாம் கூட நடக்குமா..? கடவுளே...! மனுஷனுக்கு எப்படித்தான் கஷ்டம் வரணும்னு ஒரு எல்லையே கிடையாதா..?’ என்று எண்ணியபடியே அவன் பேசக் காத்திருந்தான்..

அவனைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.. இவனுக்கு ஏதாவது உதவ முடியுமென்றால் செய்ய வேண்டும் என்று கூட தோன்றியது.

அவன் ஏதோ சொல்ல எத்தனித்த போது எங்கிருந்தோ மூன்று பேர் தபதபவென ஓடி வந்தனர்..இவன் பதறிப் போய் கணேசனின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு 
சார்..சார்..என்னை பார்த்து தான் வர்றாங்கன்னு நினைக்கிறேன் என்று பதற ஆரம்பித்தான்.

கணேசனுக்கு இப்போது உச்சி மண்டையில் ஏதோ விர்ர்ரென்று ரீங்காரமிட்டது..
இவனோடு நம்மைப் பார்த்து நமக்கும் நாலு சில்லறை கிடைத்து விட்டால்..? என்று உள்ளுக்குள் பதறினான்..

இருந்தும் அதை வெளிக்காட்டாமல் அமைதியாக அவனைப்பார்த்து
இருங்க சார்..இருங்க சார்.. என்றான்.

அம்மூவரும் இவர்கள் அருகில் வந்த போது சடாரென்று எழுந்தான் கணேசன்.

அவர்கள் இவனைத் தாண்டிச் சென்று கிளம்பிக் கொண்டிருந்த உடுமலைபேட்டை பஸ்சில் தாவி ஏறி
மாம்ஸு..ஓடியா..ஓடியா.. என்று தூர யாரையோ பார்த்துக் கத்தினர்.
பெருமூச்சுடன் தளர்ந்து போய் உட்கார்ந்தான் கணேசன்..அவன் நிலையை நினைத்து சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை..

லேசாக திரும்பி அவனைப் பார்த்தான்..அப்படியே கூனிக் குறுகி அமர்ந்திருந்தான்..ஆறுதலாக அவன் தோளைப் பற்றி
டீ சாப்பிடலாமா சார்..? என்றான்
காபி, டீ பழக்கமில்லீங்க..

அடப்பாவி! பால் மணம் மாறாத பிள்ளையாக இருக்கிறானே! இவனுக்கா இப்படி ஒரு சோதனை..? என்று நினைத்துக்கொண்டு
பரவயில்ல வாங்க ஸார்..பாலாவது சாப்பிடுங்க என்றான் கணேசன்.

அவன் மெதுவாக யோசனையுடன் எழுந்திருக்கும் போதே பின் பக்கமிருந்து யாரோ பட்டென்று அவனை தலையில் அறைந்தார்கள்..

நிலை தடுமாறி பெஞ்சிலிருந்து சுருண்டு போய் தரையில் மோதினான்.
அங்கிருந்த பெண்கள் விலகி ஓடினார்கள்..ஒரு குழந்தை வீலென்று அலறி அழ ஆரம்பித்தது..

குளிர்க் கண்ணாடி பறந்து எட்டடி தூரத்தில் எகிறி விழுந்தது..
கணேசனுக்கு நிற்க முடியாமல் கால்கள் இரண்டும் தடதடவென உதற ஆரம்பித்தது..

யேய்..ஒய்..டாய்..டாய் என்று பதட்டத்தில் கத்தினான்..

அடித்தவன் எடுத்த எடுப்பிலேயே கணேசனைப் பார்த்து
நீ யார்றா..? இவன் பிரண்டா..? என்றான்

இந்த கேள்விக்கு தவறாமல் இல்லையென்று சொல்லிவிடுவதாகத்தான் ஆரம்பத்திலேயே தீர்மானித்திருந்தான் கணேசன். ஆனால் அதை இப்படிக் கேள்வியாகச் சொன்னான்..

ஏன்..? பிரண்டா இருந்தா தான் கேட்கணுமா..?

ஒழுங்கு மரியாதையா ஓடிரு..இவனைப் பத்தி உனக்கு தெரியாது..” என்றவனிடம் 
சும்மா நிறுத்து... நீ நெனைக்கிற ஆள் அவர் கிடையாது... அவர் மாதிரியே இருக்கிற இன்னொருத்தன் என்றான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

அவன் அலட்சியமாக கணேசனிடம் நடந்து வந்து
நீ என்ன லூசாடா..? என்றான்.

கல்லூரி மாணவியர் போல் இருந்த இரண்டு பேர் முன்னிலையில் அப்படி அவமானப்பட்டது கொடியதாக இருந்தது கணேசனுக்கு.

பாய்ந்து அடித்து விடலாமென்று பார்த்தால் சத்தியராஜுக்கும், பிரகாஷ்ராஜுக்கும் சொந்தக்காரப்பயல் மாதிரி இருந்தான் அவன்..

அதையும் மீறிக் கூட அடித்து விடலாம் தான்..ஆனால் இவன் தனியாகத் தான் வந்திருக்கிறான் என்று எந்த உத்திரவாதமும் இல்லை..அதனால் ஒன்றும் செய்வதற்கில்லை..பேசாமல் நின்றிருந்தான் கணேசன்..

திரும்பி நடந்து வந்து விழுந்து கிடந்தவனிடம் குனிந்து
ஏய்..என்ன இங்க வந்து செட்டு சேர்த்துகிட்டு சுத்துறியோ..? என்றபடி அவனை முரட்டுத் தனமாய் திருப்பிப் போட்டு பர்சைப் பிடுங்கினான்..

உள்ளே இருந்த நான்காயிரம் ரூபாயை தன் பாக்கெட்டுக்குள் சொருகிக் கொண்டு பிடித்திருந்த கையை விடாமல் அப்படியே முறுக்கி உடம்பைத் திருப்பி அவன் சட்டைக் காலரை கொத்தாகப் பிடித்துத் தூக்கினான்.

இன்னும் ஆறாயிரம் அரைமணி நேரத்துக்குள்ள வந்து சேரல..மகனே இங்கேயே சமாதி தான் நீ..ஜாக்கிரதை.. என்று தள்ளி விட்டு போனான்.
செய்து விடுவான் போலத்தான் தெரிந்தது.

சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்களே தவிர யாரும் அருகில் வந்து விசாரிப்பதாக தெரியவில்லை..
என்ன மனுஷங்கடா..? நாளைக்கு நாம எங்கயாவது விழுந்து கிடந்தாலும் இதே நிலைமை தானா..?
நாம என்ன நாம..? இங்க எவன் கிடந்தாலும் அதே நிலைமை தான்
அப்படியே உறைந்து நின்றிருந்தவன் சட்டென கலைந்து, ஓடிச்சென்று நண்பனைத் தூக்கினான்.

ஸார்..அடி..கிடி ஒண்ணும் பலமா பட்டுடலயே..?
அவன் கணேசன் முகத்தை சிரமத்துடன் ஏறிட்டு
என்னால உங்களுக்கு தேவையில்லாத அசிங்கம் ஸார்..என்னை மன்னிச்சுடுங்க என்றான்.

கணேசனுக்கு உள்ளே என்னமோ செய்தது..

சே..சே..அதெல்லாம் ஒண்ணுமில்ல ஸார்..நீங்க எழுந்திருங்க..மொதல்ல நாம பக்கத்துல இருக்குற ஸ்டேஷன் போய் ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வந்துடலாம் என்றவனைத் தடுத்து
இல்ல ஸார்..அவன் பேசிட்டு போனதைப் பார்த்தா பெரிய ரௌடி போலத் தெரியுது.. இங்கேயே எங்கயாவது நின்னு நம்மள கண்காணிச்சிக்கிட்டுக் கூட இருக்கலாம்..பிரச்சினையை இப்பவே தீர்த்தா தான் உண்டு.. மேலும் போலீஸ் ஸ்டேஷன் போனா உங்களுக்கும் ஏதாவது பிரச்சினை வரலாம் இல்ல..? என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்..

அந்த கடைசி வாக்கியத்தில் கணேசன் பெட்டிப் பாம்பாக சுருங்கி,
சரிங்க இப்போ என்ன தான் பண்றது..? என்றான் முகம் மாறியவனாய்

எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்றீங்களா..?

சொல்லுங்க ஸார் ப்ளீஸ்..

நான் என் டெபிட்கார்டு தர்றேன்..பக்கத்துல இங்கே எங்கயாவது போய் ஒரு ஆறாயிரம் ரூபா பணம் எடுத்துட்டு வந்துடறீங்களா.. என்றதும்
திடுக்கிட்ட கணேசன்,
என்ன ஸார் நீங்க..? அவனுக்கு பணம் கொடுக்க போறீங்களா..?” என்றான்.

வேற வழி இல்ல சார்..போலீசுக்கு போறதுக்கு கூட முதல்ல இங்கேயிருந்து நான் வெளில போகணும்..அவன் எங்க இருக்கான்..எத்தனை பேரு இருக்காங்க..எதுவுமே தெரியாம நாம என்ன ஸார் பண்றது..? என்றான் பரிதாபமாக.

தன் கையாலாகாத்தனத்தை எண்ணி தன் மேலேயே எரிச்சலடைந்தான் கணேசன்.

மேற்கொண்டு ஏதும் பேசாமல் நீட்டிய கார்டை வாங்கிக் கொண்டு நடந்தான்.

ஸார்..ஸார்.. பின் நம்பர் வாங்காம போறீங்களே.. என்றதும்
ஓ..சாரி ஸார்..சொல்லுங்க என்று கேட்டுக் கொண்டு போனான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் என்ன என்னவெல்லாம் ஒளித்து வைத்து வேடிக்கை காட்டுமோ இந்த வாழ்க்கை..

யாரிவன்..? ஏன் நம்மை சந்திக்க வேண்டும்..? இவனிடம் ஏன் நாம் பேச்சை வளர்க்க வேண்டும்..? பாவம் முன் பின் தெரியாத என்னிடம் டெபிட் கார்டுடன் ரகசிய எண்ணைக் கொடுத்து அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏன் இவனுக்கு ஏற்பட வேண்டும்..?’ எதற்குமே விடை கிடையாது.

சக மனிதனை இந்நிலைக்கு ஆளாக்கிய கடவுளை ஒரு பாட்டம் திட்டித் தீர்த்தால் தேவலை போலிருந்தது..

சிக்னலுக்கு அருகே இருந்த ஏ.டி.எம்க்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டான்.

கார்டை செருகியதும் பசித்த நாயைப் போல லபக்கென்று கையிலிருந்து கார்டை உருவி விழுங்கியது எந்திரம்.

நான்கு இலக்க நம்பரை நினைவில் கொண்டு வந்து அடித்தான்.
க்ரீய்ங்..ப்ரீய்ங்..ச்ச்ரீங்ங் என்று இருமுறை சத்தம் எழுப்பி விட்டு அமைதியாகிப் போனது அது..

கணேசன் வெளிறிப் போனான்.
கேன்சல் செய்து ஹோம் ஸ்க்ரீன் வந்து மீண்டும் நம்பரை அடித்து பார்த்தான் எந்திரம் எந்த சலனமும் இல்லாமல் இருந்தது
கணேசனுக்கு பதற்றம் அதிகமாகியது..

கடவுளே..இதென்ன சோதனை..?என்று முனகியபடி பேடிலிருந்த எல்லா பட்டனையும் அழுத்திப் பார்த்தான்.

பக்கவாட்டில் ஓங்கி இருமுறை அடித்துப் பார்த்தான்.. ஒன்றும் பயனில்லை..

அதற்குள் வெளியில் கூட்டம் கூடி விட
ஆளாளுக்கு கதவைத் தட்டி வெளியே வரும்படி சைகை செய்தார்கள்

கணேசனுக்கு கையும் ஓடவில்லை..காலும் ஓடவில்லை..
அப்படியே நின்று கொண்டிருந்தான்..

ஒருவன் கதவைத் திறந்து உள்ளே வந்து
சார்...என்ன ஸார் பண்றீங்க..? எடுத்துட்டீங்கல்ல..? வெளியே போங்க என்றான் எரிச்சலுடன்..

கணேசன் துவண்ட முகமாய் வெளியே வந்து ரோட்டில் இறங்கி
பேருந்து நிலையம் நோக்கி நடந்தான்..

தூரத்தில் தளர்ந்து போய் கணேசன் வருவதைக் கண்டதும் அவன் சுற்றும் முற்றும் பார்த்தபடி ஓடி வந்தான்.

ஸார்..எடுத்துட்டீங்களா..? ஏன் ஸார் இவ்வளவு நேரம்..? கூட்டம் ஜாஸ்த்திங்களா..? ஏன் சார் ஒன்னுமே பேசமாடேங்கறீங்க..? என்ன ஆச்சு..? என்றான் அடுக்கடுக்காக..

லேசான குற்ற உணர்வுடன் அவனைப் பார்த்து
கா..கா..கார்டு மெஷின்ல மா..மாட்டிக்கிச்சு ஸார் என்றான் கணேசன்.
அவன் இடிந்து போய் தொப்பென்று அருகிலிருந்த பெஞ்சில் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.

பட்டணத்தில் தொலைந்த கிராமத்தானாய் அவனை வெறித்துக் கொண்டிருந்தான் கணேசன்.

திடீரென்று நிமிர்ந்து கணேசனைப் பார்த்து எனக்கு மட்டும் ஏன் ஸார் இப்படில்லாம் நடக்குது..? என்று படீர் படீரென்று தலையில் அடித்துக் கொண்டு அதிர வைத்தான்..

ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாய் கணேசன் ஒரு நிமிஷம் இருங்க ஸார் என்று கூறி விட்டு எங்கோ சென்றான்.

ஐந்து நிமிடங்களில் திரும்பி வந்து அவனிடம் பத்தாயிரம் ரூபாயை நீட்டினான்.

அதிர்ச்சியும், ஆச்சரியமுமாய் கணேசனைப் பார்த்து
ஸார் கார்டு கிடைச்சுருச்சுங்களா..? என்று வினவினான்

இல்ல ஸார்..இது என் கார்டுலேர்ந்து எடுத்துட்டு வந்தேன்

ஐயோ உங்களுக்கு ஏன் ஸார் சிரமம்..? என்று பதறியவனிடம்
ஒண்ணும் பேசாம வாங்கிக்கோங்க என்று பணத்தை வைத்து அழுத்தினான் கணேசன்.

நடப்பதை நம்ப முடியாதனாய் கணேசனின் கைகளைப் பற்றிக் கொண்டு,
ஸ..ஸார்..ரொம்ப தேங்க்ஸ் ஸார்..உங்க அட்ரஸ், போன் நம்பர் எல்லாம் கொடுங்க ஸார்..ரெண்டு நாள்ல நானே உங்க வீடு தேடி வந்து பணத்தை திருப்பி கொடுத்துடறேன் ஸார் என்று உணர்ச்சிவசப்பட்டவனை மெலிதாகப் புன்னகைத்து அமைதியாக்கி விட்டு தன் விலாசத்தையும், அலைபேசி எண்ணையும் கொடுத்தான்..

பரபரவென்று பணத்தை எண்ணிய அவன் பதறிப் போய்
ஸார் இதுல பத்தாயிரம் இருக்கு..எனக்கு ஆறாயிரம் போதும் என்றான்.

இருக்கட்டும் ஸார்..பாவம் என்ன செலவுக்கு வெச்சுருந்தீங்களோ..பர்ஸுல இருந்த எல்லாத்தையுந்தான் புடிங்கிட்டு போயிட்டானே அந்த ரௌடி.. என்ற கணேசனை மூச்சு பேச்சு இல்லாமல் கையெடுத்துக் கும்பிட்டான் அவன்.

விடை பெற்று கிளம்பியவனை தடுத்து ஸார்.. முடிஞ்சவரைக்கும் அந்த ரௌடிப்பய கண்ணுல பட்டுடாம போகப் பாருங்க என்றான்.
அவன் மரியாதை கலந்த நன்றியுடன் கனிவாக தலையாட்டி விட்டு வேகமாக நகர்ந்தான்..

மனமெல்லாம் இனம் புரியாத நிறைவும், மகிழ்ச்சியுமாய் இருந்தது கணேசனுக்கு..

திருப்பத்தில் திரும்பி மறையும் வரை அவன் முதுகையே பார்த்தபடி நின்றவன் ஒரு பெருமூச்சோடு திரும்பினான்.
திரும்பிய கணமே கண்கள் விரித்து ஆச்சர்யம் காட்டினான்..

வெகு அருகில் சுப்பு மாமா நின்று கொண்டிருந்தார்.
கணேசன் மேல் எப்போதும் அளவு கடந்த பாசம் காட்டும் ஒரே தாய்மாமன். கவுண்டம்பாளையத்தில் பெரிய வீடு அவருடையது.

மா..மாமா..நீங்க எங்க இந்த பக்கம்..? ஊருக்கு ஏதும் கிளம்பிட்டீங்களா..?

அதெல்லாம் இருக்கட்டும்..அவன் யாரு உன் சிநேகிதனா..?

இல்லை மாமா..அது ஒரு பெரிய கதை..அது இருக்கட்டும்..அத்தை எப்படி இருக்காங்க..?

டேய்..கேட்டதுக்கு பதில் சொல்லுடா.. கடுகடுத்த மாமாவை ஆச்சரியமாகப் பார்த்தான் கணேசன்.

நடந்த எல்லாவற்றையும் ஒன்று விடாமல் கூறி விட்டு
அவர் பாராட்டைப் பெற கம்பீர புன்னகையோடு நின்ற கணேசனைப் பார்த்து போடா பைத்தியக்காரப் பயலே என்றார் மாமா சத்தமாக.

கணேசன் சுற்றுமுற்றும் பார்த்து மா..மாமா.. என்றான் திகைப்பாக

என்னடா நோமா..? அவன் யாருன்னு தெரியுமாடா உனக்கு..? நாப்பது பர்சன்ட் வட்டினு சொல்லி உங்க அத்தை எனக்கு தெரியாம ஒரு சீட்டுக் கம்பனியில நகைய அடமானம் வெச்சு ஏழு லட்ச ரூபாய கொண்டு போய் தார வார்த்துட்டு நின்னாளே...
இந்த தடித்தாண்டவராயன் கிட்டதாண்டா அது..இவனைப் பத்தி பேப்பர்லயே நியூஸ் போட்டிருந்தானடா..
மஞ்ச நோட்டீஸ் கொடுத்துட்டு மூணு செக்ஷன்ல பண்ண தப்புக்கு நாலு வருஷம் உள்ள போயிட்டு வந்த அயோக்கியப்பயடா அவன்..நானே அவன் மேல ரெண்டு கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கேன் தெரியுமா..? 
நீங்கள்லாம் படிச்சவனுங்க தான..? மூளைய என்ன கசாப்பு கடையிலையா வச்சுருக்கீங்க..? அவுரு வந்தாராம், வருத்தப்பட்டாராம்.. இவுரு தூக்கி கொடுத்தாராம்..ஏன்டா..வாழ்க்கையில ஒருத்தன் படிப்பு, அறிவு, அனுபவம் இதெல்லாம் கொஞ்சம் கூடவாடா கூட வராம போயிடும்... ச்சைக் என்று வெடித்து விட்டு போனார் மாமா..
                                                                                   (கிளைமாக்ஸ் ஒன்று)

கதையைத் தொடர விரும்பும் வாசகருக்கு மட்டும் :

யாரோ பின்னந்தலையில் லைவ் வொயர் வைத்து இழுத்தது போல் இருந்தது கணேசனுக்கு.

சிறிது நேரம் நின்ற இடத்திலேயே மலங்க மலங்க விழித்துக் கொண்டு நின்றிருந்தான்..

அவன் விலாசம், தொலைபேசி எண் என்று எதையுமே வாங்காமல் விட்டது அப்போது தான் உறைத்தது..

எவ்வளவு தூரம் போயிருப்பான்..? துரத்திச் சென்று பிடித்து விடலாமா..? ம்ஹும்..இத்தனை நெரிசலில் இந்த கோவையில் எங்கே புகுந்து எப்படி போனானோ சதிகாரன்..? 

சே..எவ்வளவு பெரிய நாடகம்? வந்து அடித்து மிரட்டியவன் கூட இவன் ஆளாக இருப்பானோ..?

எத்தனைக் கச்சிதமாகக் கறந்து கொண்டு பறந்து விட்டான்..?
டெபிட் கார்டு, பின் நம்பர்லாம் கொடுத்தானே..!!? ஆமா..ஏதாவது காலாவதியான கார்டா இருக்கும்..அதான் மெஷின் முழுங்கிருச்சு!
அடக்கண்றாவியே! இது கூட தோணாம போச்சே..!!

மாமா சொன்னது போல் பைத்தியக்காரனே தான் நாம்..
அர்ச்சனாவிற்கு தெரிந்தால் ஒரு வாரமாவது இடைவிடாது அர்ச்சனை
செய்வாள். 

ஒவ்வொரு நாளும் சீரியல் பிரேக்கின் போதெல்லாம் வம்சத்துக்கே னா இனிஷியல் வைத்து பரம்பரையையே பழித்து பேசினாலும் பேசுவாள்..

இந்த வாண்டு சுரேஷும் சேர்ந்து கொண்டு சிரிக்கும்..மூத்தவள் சம்யுக்தா வந்து காப்பாற்றினால் தான் உண்டு.

பாவம் நம்மால் கொள்ளுத் தாத்தா, எள்ளுத் தாத்தாவெல்லாம் சமாதியில் சங்கடப்படக் கூடும்..

அதற்கு மேல் அங்கு ஒரு நிமிடம் கூட நிற்க முடியாமல் புறப்படத் தயாராக இருந்த விருத்தாசலம் பஸ்சில் ஏறி அமர்ந்தான்.

மனமெல்லாம் வலித்தது கணேசனுக்கு. தன் படிப்பு, உத்தியோகம், தலைமைப் பண்பு, பர்சனாலிட்டி, மண்ணு, மண்ணாங்கட்டி, எல்லாம் கொஞ்ச நேரத்திற்கு முன் யாரோ ஒருவனால் தவிடு பொடியானதை ஜீரணிக்கவே முடியவில்லை கணேசனால்..

பத்தாயிரம் போனதை விடவும் அது போன விதம் வலித்தது. அவனுக்காக கடவுளையே பழித்தது வேறு நினைவில் வந்து அவ்வப்போது உறுத்தியது.

வேணும்..வேணும்..எனக்கு நல்லா வேணும்டா.. திட்டிக்கொண்டு அப்படியே தூங்கிப் போனான்.


ஒரு பெரிய ஹாரன் சப்தம் கணேசனை தூக்கிப் போட்டு எழுப்பியது..
பஸ் விருத்தாசலம் பேருந்து நிலையத்தை நெருங்கி விட்டிருந்தது..
எப்போது ஈரோடு, சேலம், எல்லாம் வந்து போயிற்றென்றே தெரியவில்லை..

இது போல எந்த பயணத்திலும் உறங்கியதில்லை அவன். அந்தளவிற்கு உடலும், மனமும் சோர்ந்து போயிருந்தன.
ஒரு சிகரெட் பிடித்தால் தேவலாம் போலிருந்தது..

பஸ் நின்றதும் பையை மாட்டிக் கொண்டு இறங்கியவனாய் ஒன்றைப் பற்ற வைத்து ஆழமாக இழுத்து கண்களை மூடினான்.

ஏமாற்றியவனின் முகம் சுருள் சுருளாய் புகையின் மத்தியில் நினைவுகளில் உருண்டோடியது.

மொபைலில் மனைவியை அழைத்து விருத்தாசலம் வந்து விட்டதாக சொன்னான்..

என்ன ஒரு மாதிரி டல்லா இருக்கு வாய்ஸ் என்றவளிடம்
ஒன்றுமில்லை..சிக்னல் சரியில்லை என்றான்

பாதகத்தி எப்படித் தான் கண்டு பிடிப்பாளோ? வேறு எதைச் சொன்னாலும் துருவித் துருவிக் கேட்டு என் வாயிலிருந்தே எல்லாவற்றையும் கறந்து விடுவாள்..

ஏதோ பேச ஆரம்பித்தவளை ஹலோ..ஹலோ.. என்று இரண்டு மூன்று தடவை கூறி நிறுத்தி தொடர்பைத் துண்டித்து விட்டு பாண்டிச்சேரி பேருந்திற்காக தலையை தூக்கி நோட்டம் விட்டபடியே நடந்தான். ஏதும் தென்படவில்லை. விசாரித்த போது இன்னும் அரை மணிநேரம் ஆகும் என்றார்கள்..

கடலூர் செல்லும் பேருந்து பத்து நிமிடத்தில் கிளம்பத் தயாராக இருந்தது.
வயிறு பசித்தது. ஒரு டீ சாப்பிட்டு ஏறி விடலாம் என்று டீக்கடைக்கு விரைந்தான்.

டீக்கடை பெரிய கும்பலோடும், யுவன் சங்கர் ராஜாவின் பேரிரைச்சலோடும் இருந்தது.

கடையின் பக்கவாட்டில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக ஆட்கள் அங்கும் இங்கும் ஓடிய வண்ணம் இருந்தனர்.

மூன்று பேர் சேர்ந்து யாரோ ஒருவனை மடக்கி மடக்கி அடித்துக் கொண்டிருப்பதை நிறைய பேர் ஆவலுடன் எம்பி எம்பி பார்த்தார்கள்.

கணேசனும் விரைந்தான்..முன்னால் இருந்த இரண்டு பேரை விலக்கி
எட்டிப் பார்த்தவனின் உடம்பில் ஓடிய ரத்தம் முழுக்க தலையில் ஏறியது போல் இருந்தது ஒரு கணம்.

அடிக்கப்பட்டவன் சாட்சாத் கணேசனை கோவையில் ஏமாற்றி விட்டு ஓடியவனே தான் ..!என்ன பெயர் சொன்னான்..? வெங்கட்டு...விக்னேஷா....?

மவனே..வாடா வா..கடவுள்'னு ஒருத்தன் இல்ல...? முனகிக் கொண்டே அவன் முன்னால் போய் நின்றான்.

அடித்தவர்களில் ஒருவன் அவனைப் பிடித்து பலமாக கணேசன் மேல் தள்ளினான். தன் மேல் விழ இருந்தவனை முரட்டுத்தனமாக தடுத்து நிறுத்தினான் கணேசன்.

நிமிர்ந்த அவன் அதிர்வதற்கு பதிலாக விழிகளில் வியப்பைக் காட்டி
ஸார்..நீ..நீங்களா..சார்..என்னை காப்பாத்துங்க ஸார்..கொன்னுருவாங்க போலருக்கு சார்..ப்ளீஸ் ஸார் என்று கதற ஆரம்பித்தான்.

பெருங்கோபத்தில் இருந்த கணேசனை அவன் முகமும், வாயோரம் வழிந்த ரத்தமும் இளக்கின..என்றாலும் கோபத்தை குறைத்துக் கொள்ளாமல் யேய் நிறுத்துடா அயோக்கிய ராஸ்கல்.. என்றான் அந்த பிராந்தியமே அதிரும்படி.

எல்லோரும் இப்போது கணேசனை திரும்பி பார்த்தனர்.

ஸா..ஸா..சார் என்று தடுமாறியவனை சுட்டு விரல் காட்டி அடக்கினான்..
அதற்குள் ஒருவன் ஓடி வந்து அவனை முதுகில் அறைந்தான்.
அவனுக்கு உறைத்தது போலவே தெரியவில்லை..

அவன் கண்கள் அதிர்ச்சியில் கணேசன் முகத்தையே வெறித்துப்
பார்த்தன..

அடிக்கறத நிறுத்துங்க ஸார்..இவனை போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போகணும்...வேணுமின்னா என்கூட நீங்களும் வரலாம் என்றான் பொதுவாக.

கூட்டம் அதோடு கலைந்தது கணேசனுக்கு விநோதமாக இருந்தது.
மெதுவாக தாங்கி தாங்கி கணேசன் அருகில் வெகு பரிதாபமாக வந்தான் அவன்.

ஏன் ஸார்..? நான்...அவுங்க...எனக்கு.. என்று துண்டு துண்டாய் ஏதோ பேச முற்பட்டு முடியாமல் உடைந்து அழுதான்..

அவன் அழுது முடிக்கும் வரை காத்திருந்த கணேசன்
என் பணத்த எடு.. என்றான்

கிழிந்த சட்டைப்பையைக் காட்டி கையை விரித்து விரக்தியாக
எல்லாம் போச்சு என்பது போல் அபிநயித்தான்.

சரி! போலீஸ் ஸ்டேஷன் நட.! என்றதும் ஒன்றும் பேசாமல் தலையைக் கவிழ்த்துக் கொண்டு கணேசன் பக்கத்தில் நடக்க ஆரம்பித்தான்..

மூன்று நிமிட மௌன நடைக்குப் பிறகு கணேசன் வெடித்தான்..
உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதாடா..? எப்படியெல்லாம் டிராமா பண்ண நீ பணத்துக்காக...? இதுக்கு எங்கயாவது போய் பிச்சை எடுக்கலாமில்ல நீயெல்லாம்..? உன்னை நம்பி, உனக்காக இரக்கப்பட்டு  தானடா கொடுத்தேன்? எனக்கு துரோகம் பண்ண எப்படி மனசு வந்துச்சு உனக்கு..?

அடுக்கடுக்கான கணேசனின் கேள்விகளுக்கு மெளனமாகவே இருந்தான் அவன்.

வாயத்தொறந்து பேசுடாங்கத்...... என்றான் கணேசன் காட்டமாக..
விரக்தியும், சோகமுமாய் கணேசனை ஏறிட்ட அவன் கொஞ்சம் தண்ணி வேணுங்க.. என்றான் மெதுவாக

திட்டியதில் கொஞ்சம் கோபம் தணிந்தவனாய் அருகிலிருக்கும் பெட்டிக் கடைக்கு அவனைத் தள்ளிக் கொண்டு போய் தண்ணி பாக்கெட் வாங்கி வீசினான்..

படக்கென்று பாக்கெட்டை பிடித்து வேக வேகமாக முனையைக் கடித்துத் துப்பி மடக்மடக்கென்று பாதி பாக்கெட் வரை குடித்து விட்டு குளிர்ச்சியாக இருந்த மீதி தண்ணீரை உள்ளங்கையில் ஊற்றி முகத்தை அலம்பிக் கொண்டான்..

ஓங்கி இரண்டு மூன்று முறை இருமி, கிழிந்திருந்த உதட்டின் வழியே ரத்தமாக உமிழ்ந்தான். பலமாக அடித்திருக்கிறார்கள்.. கண்கூடாகத் தெரிந்தது.

கணேசனுக்கு மீண்டும் ஏதோ போல் இருந்தது..

கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு வாங்கி விட்டு பின் பேச ஆரம்பித்தான்.
ஸார்..அவுங்க ஏன் அடிச்சாங்கன்னும் தெரியலை..நீங்க ஏன் என் மேல கோபப்படுறீங்கன்னும் புரியலை..! நான் என் விதிய நினைச்சு அழுவறதா..? வலிய நினைச்சு அழுவறதா.. என்றான் கம்மிய தொண்டையில்..

அதற்குள் நான்கு முறை இருமி விட்டான்.

இங்க பாரு ..இப்போ நான் கேட்குற கேள்விக்கு மட்டும் நீ ஒழுங்கா பதில் சொல்லு.. நீ எப்படி அதுக்குள்ள இந்த ஊருக்கு வந்த..?

நான் எங்கே சார் வந்தேன்..? என்னை யாரோ இங்க கடத்திகிட்டு வந்துட்டாங்க ஸார்.. என்றவனை வியப்போடு பார்த்தான் கணேசன்.

பின் கிண்டலாக யாரு பிரகாஷ் ராஜா..? ஆஷிஷ் வித்யார்த்தியா..? என்றான்.

ப்ளீஸ் ஸார்..நிஜமாத்தான் சொல்றேன்..உங்ககிட்ட பணத்தை வாங்கிட்டு பஸ் ஸ்டாண்ட்லேர்ந்து எங்க பீட் ஸ்டேஷன் போய் இன்னொரு உத்தரவாதக் கடிதம் வாங்கிட்டு வீட்டுக்கு போகலாம்னு தான் போனேங்க..

போற வழியில திடீர்னு ஒரு மாருதி வேன்லேர்ந்து அஞ்சாறு பேர் இறங்கி என் முகத்தை மூடி உள்ளே தூக்கிப் போட்டு இங்கே கொண்டு வந்துட்டாங்க.

என்னை இங்கே இறக்கி விட்டுட்டு இந்த கும்பல் கிட்ட ஏதோ சொன்னாங்க..அப்புறம் இவங்க சரமாரியா அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க..
அந்த வேன் நம்பர் கூட நோட் பண்ணினேன் சார் என்று நம்பரைச் சொன்னான்.

வழி பூரா அவுங்களும், இங்க வந்து இவங்களும் அடிச்சப்போ இருந்த வலியை விட நீங்க திட்டுனது தான் ஸார் அதிகம் வலிச்சது எனக்கு
என்றான் விம்மியபடி..

உண்மைதான்.. அங்கே அவனை அடித்துக் கொண்டிருந்த போது
கணேசனை அப்படித்தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

சற்றே குரலைத் தாழ்த்தி அதெல்லாம் சரி! நீ சீட்டுக் கம்பனி நடத்தி
ஊரை ஏமாத்திட்டு ஓடிட்டதா சொல்றாங்க..? அது உண்மை தானே..மறைக்காம சொல்லு..அதுக்காக ஜெயிலுக்கு கூட போனியா இல்லையா..? என்றான் கணேசன்.

சீட்டுக் கம்பனியா..? நானா..? நான் ஆர்.எஸ்.புரத்துல டைல்ஸ் பிசினஸ் பண்றேங்க..எங்க அப்பா, தாத்தா காலத்துலேர்ந்தே எங்களுக்கு ஒரே பிசினஸ் தாங்க..எனக்கு நீங்க சொல்ற வியாபாரத்துலயெல்லாம் சுத்தமா அனுபவமே கிடையாதுங்க.. என்றான் அப்பாவியாக.

மேலும் ஒருவேளை அது அந்த ராஸ்கல் வேலையா கூட இருக்கலாமில்ல ஸார்..? எனக்கு எப்படி ஸார் தெரியும் என்றான்

கணேசனுக்கு இப்போது குழப்பமாக இருந்தது..எங்கோ தவறி விட்டதைப் போலிருந்தது..

அதானே..?? அது ஏன் அந்த இன்னொருவனின் வேலையாக இருக்கக் கூடாது..? அது தானே இவன் பிரச்சனையே..!! அதற்காகத் தானே பாவம்
அடியும்,உதையும்,பழியும் என்று அத்தனை அவமானமும் பட்டு அங்கும் இங்கும் அலைகழிந்து கொண்டிருக்கிறான்..?

இவன் சொன்னது என்ன..? இரண்டு நாளில் பணத்தை திருப்பி தந்து விடுகிறேன் என்று தானே..? அதற்குள் அவசரப்பட்டு நம்மை ஏமாற்றி விட்டான் என்ற முடிவுக்கு எப்படி வந்தோம்? அடக்கடவுளே! 
மாமாவிற்கு இது புரியாமல் போவதற்குக்கூட நியாயம் இருக்கலாம்..! நேரில் கண்ட நாமே இப்படி நடந்து கொள்ளலாமா..?
எத்தனை மடத்தனமாக முடிவெடுத்து விட்டோம்..?

கணேசனின் மௌனம் அவனை மேலும் கலவரப்படுத்தி விட்டதை போல ஸார்..இப்போ நான் போலீஸ் ஸ்டேஷன் போய் ஒரு தடவை என் மேல FIR போட்டுட்டாங்கன்னா, அப்புறம் ஜென்மத்துக்கும் நான் என்ன சொன்னாலும் யாரும் எதையும் நம்ப மாட்டாங்க சார்..பிறகு  எனக்கு எந்த வாய்ப்புமே இல்லாம போயிடுங்க..கொஞ்சம் யோசிச்சு பாருங்க சார் ப்ளீஸ்..உங்க பணத்தை நான் சொன்னா மாதிரியே ரெண்டு நாள்ல கண்டிப்பா திருப்பிக் கொடுத்துடறேன் ஸார்.. என்றதும்
கணேசன் தலையைப் பிடித்துக் கொண்டு அப்படியே ரோட்டோரமாக இருந்த சிமென்ட்டு திண்டில் உட்கார்ந்து விட்டான்.

பக்கத்தில் மௌனமாக நின்று கொண்டிருந்தான் அவன்.
கணேசனுக்கு அவனை ஏறெடுத்து பார்க்கவே சிரமமாயிருந்தது..

ஒரு நிமிடம் கழித்து இப்படி உட்காருங்க ஸார் என்றான் சற்று சலிப்புடன். அவன் ஏதும் பேசாமல் நின்ற வண்ணம் இருந்தான்.

மெதுவாக எழுந்த கணேசன் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து, அவனிடம் ஒன்றை நீட்டினான்..

சாரி..ஸார் எனக்கு பழக்கமில்ல..

பெருமூச்சொன்றை விடுத்து சரி இப்போ எங்கே போகணும்..? என்றான் கணேசன்.

ஊருக்குதான் ஸார் போகணும்

எப்படி போவீங்க..? கையில காசு இருக்கா..?

இல்லீங்க..எல்லாத்தையும் பிடுங்கிட்டாங்க..

இந்த ஊருல யாரையாவது தெரியுமா..? என்றதற்கு இடம் வலமாக தலையாட்டி விட்டு மெளனமாக நின்றான்..

இன்னும் அவன் கண்களில் வலியின் மிச்சமும் அவமானத்தின் மிச்சமும் மிதந்து கொண்டிருந்தன..

கணேசன் பின் பாக்கெட்டில் இருந்து பர்சை எடுத்துப் பிரித்து ஒரு ஐநூறு ரூபாய் தாளை நீட்டினான்.

ஐயோ வேணாம் சார்..ஏற்கனவே எனக்கு எக்கச்சக்கமா உதவி பண்ணியிருக்கீங்க..உங்ககிட்ட இனிமே உதவி வாங்கக் கூடாதுங்க என்று வேகமாய் மறுத்தவனை
அதெல்லாம் பரவாயில்லை..வெச்சுக்கோங்க அப்புறம் எப்படி ஊருக்கு போவீங்க..? என்று வற்புறுத்திய பின் நிறைய கூச்சத்தோடு வாங்கிக் கொண்டான்..

அங்க..இங்கனு நிறைய அடிப்பட்டிருக்கும் போல..மொதல்ல ஹாஸ்பிடல் போயிட்டு அப்புறம் ஊருக்கு போங்க..இந்தாங்க இதையும் வெச்சுக்கோங்க என்று மேலும் ஒரு ஆயிரம் ரூபாயை நீட்டினான்..

இப்போது அவன் கணேசனின் கரங்களை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டு நான் கும்பிடுற சாமி தான் ஸார் உங்களை எங்கிட்ட அனுப்பிச்சு வெச்சுருக்கு..உங்களை நான் சாகுற வரை மறக்க மாட்டேங்க சார்...இது கடவுள் சத்தியம் ஸார்.. என்றான்

காலில் விழாத குறையாக நன்றி சொல்லி விட்டு நகர்ந்தான்..

யாராவது உள்ளன்போடு பாராட்டினால் ஒரு நிமிடம் உறைந்து போவோமல்லவா..? அது போல மூளை உறைந்து கையசைத்து விடை கொடுத்தவன் சட்டென்று சுதாரித்துக் கொண்டு

ஆங்..அங்கேயே கேட்கணும்னு நினைச்சேன்..உங்க கார்டு ஒண்ணு இருந்தா கொடுங்க என்றான் கணேசன்

எல்லா கார்டும் பர்ஸுலதாங்க வெச்சுருப்பேன்...அதான் பர்ஸோட போச்சுங்களே..என் நம்பர் வாங்கிக்கோங்க ஸார்..போன் பத்திரமா தான் இருக்கு.. என்று நம்பர் கொடுத்துவிட்டு,
அட்ரெஸ் வந்து.. என்று இழுத்தவனிடம் வேண்டாங்க..அதான் நம்பர் இருக்கே.. என்று விடை கொடுத்தான் கணேசன்..

மனித வாழ்க்கையில் தான் எத்தனை பயணங்கள்..? எத்தனை வித அனுபவங்கள்..? எத்தனை திருப்பங்கள்..? கடந்து போகும் யார் யாரையோ பற்றின எண்ணங்கள், குழப்பங்கள், மன மாற்றங்கள் தான் எத்தனை..எத்தனை..? இன்று இரவு நம் டைரியின் பல பக்கங்களை ஆக்கிரமிக்க இருப்பது இப்பயணமே..! 

ஏதேதோ கலவையான உணர்வுகளோடு மீண்டும் பேருந்து நிலையம் வந்து உறுமிக் கொண்டிருந்த இன்னொரு கடலூர் பஸ்சில் ஏறி வசதியாகச் சாய்ந்து கொண்டான் கணேசன்.
                                                                                 (கிளைமாக்ஸ் இரண்டு)

மேலும்........ :
பஸ் நெய்வேலியை நெருங்கிய போது பொழுது சாய்ந்து லேசாக இருட்டத் தொடங்கியது..

அர்ச்சனாவை அழைத்து பேசலாம் என்று போனை எடுத்தவனுக்கு
பளீரென்று ஏதோ ஒரு மின்னல் தோன்றி மறைந்தது..

விடுவிடுவென போனில் தொடர்புப் பெயர்ப் பட்டியலில் வெங்கட் விக்னேஷ் என்ற பெயரைத் தேடி கால் செய்தான்..

சிறிது நேர மௌனத்திற்கு பிறகு ஒரு பெண் குரல்

ப்ளீஸ் ச்செக் தி நம்பர் யூ ஹாவ் டயல்டு..நீங்கள் அழைத்த எண்ணை தயவு செய்து சரி பார்க்கவும் 
என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி சொல்லத் தொடங்கியது..

அப்போது தான் அந்த எண்ணையே சரியாகப் பார்த்தான் கணேசன்.
மிகச் சரியாக ஒன்பது இலக்க நம்பர் ஒன்றை தந்து விட்டு போயிருந்தான் வெங்கட் விக்கேஷ்வர்
                                                                           (கிளைமாக்ஸ் மூன்று)

மேலும் விழைவோருக்கு:

கதையை எழுதி முடித்து உறையில் போட்டு மூடி பத்திரிகை முகவரியை குறிப்பிட்டு தபால்தலை ஒட்டி பெட்டியில் போட்டு விட்டு வந்த போது மிகப் பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போலிருந்தது.

மூன்று வருடங்களாக ஒருவரிடமும் சொல்லாததை இன்று ஊருக்கே சொல்லி விட்டோம் என்பதை நினைக்கும் போது ஒரு மகத்தான விடுதலையை, நிம்மதியை மனதில் உணர்ந்தேன் நான்!
(இப்பொழுது கதையின் தலைப்பை மீண்டும் வாசிக்கவும்)
                                                                          (கிளைமாக்ஸ் கிளைமாக்ஸ்)





No comments: